ஏசாயா 63

1 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

2 உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன?

3 நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

4 நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.

5 நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.

6 நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்.

7 கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன்.

8 அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.

9 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

10 அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

11 ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

12 அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,

13 ஒரு குதிரை வனாந்தர வெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?

14 கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.

15 தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

16 தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.

17 கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

18 பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.

19 நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.