2 இராஜாக்கள் 20

1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

4 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

6 உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.

7 பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

8 எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.

9 அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.

10 அதற்கு எசேக்கியா: சாயை பாத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.

11 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

12 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

13 எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

14 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

15 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்.

17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

18 நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

20 எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

21 எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.