ஏசாயா 42

1 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

3 அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:

6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

7 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

9 பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10 சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

11 வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.

12 கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.

13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.

16 குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

17 சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

18 செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.

19 என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?

20 நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான்.

21 கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

22 இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.

23 உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?

24 யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.

25 இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.