ஏசாயா 30

1 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என்ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

2 என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.

4 அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.

5 ஆனாலும் தங்கள் சகாயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

6 தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

7 எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.

8 இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

9 இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.

10 இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

11 நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

12 நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்ளுகிறபடியால்,

13 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

14 அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோகும்.

15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;

16 அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்.

17 நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

18 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்.

19 சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.

20 ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.

21 நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

22 உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.

23 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;

24 நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.

25 கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.

26 கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.

27 இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

28 நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.

29 பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.

30 கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.

31 அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான்.

32 கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.

33 தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு: கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.