ஏசாயா 13

1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்டபாரம்.

2 உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.

3 நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

4 திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் யுத்தராணுவத்தை இலக்கம்பார்க்கிறார்.

5 கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

6 அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

7 ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோகும்.

8 அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

9 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.

10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

11 பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.

12 புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.

13 இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.

14 துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.

15 அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.

16 அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.

17 இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,

18 வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

19 ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.

20 இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.

21 காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.

22 அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார்.