யாத்திராகமம் 13

1 கர்த்தர் மோசேயை நோக்கி:

2 இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.

5 ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.

6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.

7 அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.

8 அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.

9 கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;

10 ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக.

11 மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,

12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

13 கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.

14 பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

15 எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.

17 பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

18 சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

19 மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.

21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

22 பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.