1 சாமுவேல் 18

1 அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.

3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்.

4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

7 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

8 அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

9 அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

10 மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான்.

12 கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,

13 அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

14 தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

16 இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

17 என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

18 அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

19 சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங்காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

20 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

21 அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.

22 பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

23 சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.

24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.

25 அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

26 அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

27 அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

28 கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

29 ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.

30 பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.